Pages

Share

Friday 20 October 2017

முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, அரசு அலுவலக ஊழியர்களில் சிலரும் இப்படி ஏமாற்றலாம்...

நமக்கு போன் செய்யும் மர்ம நபர் நம்மிடமே ஆதார் எண், அலைபேசி எண் அது இது என்று எதையாவது கேட்டு அதன் மூலம் அக்கவுண்ட்டில் உள்ள மொத்த பணத்தையும் ஸ்வாஹா செய்யும் போக்கு அடிக்கடி நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படித்தவர்கள், உலகம் தெரிந்தவர்கள் கூட அவர்களை அறியாமல் ஏமாந்துவிடுவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

எனக்கு இப்படி எல்லாம் போன் வராது. ஏன்னா, சிலிண்டர் மானியம்னு அக்கவுண்ட்ல ஏறும் சொற்ப தொகையும் வங்கி அபராதம் என்று துடைக்கப்பட்டுவிடும்போது முகம் தெரியாத ஃப்ராடுகள் எடுக்குறதுக்கு பணம் எங்க இருக்கும். அதனால நான் எப்பவும் எஸ்கேப்தான்.

நண்பர் ஒருவர் குடும்பஸ்தர். வருமானத்துக்கு சிரமமாக இருக்கிறது என்று செய்து வந்த தொழிலை மனைவியை கவனிக்க சொல்லிவிட்டு சென்னையில் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விட்டதாக சொன்னார்.

இது என்ன புது கதையா இருக்கு...

கோட்டையும் இல்ல... கொடியும் இல்ல... அப்பவும் நான் ராஜான்னுங்குறது மாதிரி, ஒரு இண்டர்வியூ இல்ல, அப்ளிகேஷன் போட்டதா தெரியல... அப்புறம் எப்படி வேலைன்னு கேட்டேன்.

தெரிஞ்சவங்க மூலமா வேலைக்கு சேர்ந்துருக்கேன். ரெண்டு வருஷம் முடிஞ்சதும் நிரந்தரமாக்கிடுவாங்களாம் என்றார்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள்ல நிர்வாகம் ரேட் பேசி வாங்கிட்டு போஸ்டிங் போடுறது வழக்கம். சில அரசு அலுவலங்கள்ல அவ்வப்போது காலிப்பணியிடம் எப்படி நிரப்புறாங்கன்னு யாருக்கும் தெரியாத ரகசிய பட்டியல்ல இருக்கும். ஆனா நீ சொல்றத பார்த்தா, அவங்க வேலை நெருக்கடி முடிஞ்சதும், இவ்வளவு நாள் என் கைப் பணத்துல இருந்துதான் சம்பளம் கொடுத்தேன். எங்களால தாக்குப்பிடிக்க முடியாது. கஷ்டப்பட்டும் நாங்களே இனி இந்த வேலைய பார்த்துக்குறோம்... சாரி தம்பின்னு உன்னைய வெளியில அனுப்பிட்டு உன்னை மாதிரி அடுத்த அடிமையை அடுத்த வருஷம் தேடிக்குவாங்க என்று எச்சரித்தேன்.

அப்படி எல்லாம் இல்ல நண்பா. எனக்கு சம்பளம் கவர்மெண்ட் கிட்ட இருந்துதான் வருதாம்.

எவ்வளவு வந்துச்சு...

இன்னும் ஒரு மாசம் ஆகலை...

சரி... வாங்கினதும் சொல்லு.
******
தீபாவளிக்கு ஊருக்கு வந்திருப்பானே என்று போன் செய்தேன்.

நீ சொன்னது சரிதான். இன்னும் கவர்மெண்ட்ல இருந்து ஆர்டர் வரலை. என் பணத்தைதான் தர்றேன் என்று சொல்லி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாராம் அந்த அலுவலர். சென்னையில் 1 1/2 மாதம் தங்கி வேலை பார்த்தவனுக்கு கிடைத்த தொகை இது.

காலங்கள் மாறும்...
கோலங்கள் மாறும்...
காட்சியின் கருத்து மட்டும் மாறாதோ....

--------------------------------------------------------------------------------------------
இனி தொடர்வது பழைய பதிவில் ஒரு பகுதி...

சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.

எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.

போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம சாப்பிட மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.

அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.

Image Credit: womenseducationproject.org
அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.

"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.

அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.

"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.

"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.

எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.

நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.

எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.

சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.

இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.

அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.

ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.

வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான். பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.

எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.

பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.

"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

முதன் முதலில் இந்த பதிவு எழுதப்பட்டது - 25-மார்ச்-2010

No comments:

Post a Comment