Pages

Share

Wednesday 18 October 2017

ஆத்தாடி... மெர்சல் படம் இம்புட்டு தியேட்டர்ல ரிலீசா?

வேலை இல்லாதவன் எதையோ புடிச்சு வெச்சி என்னவோ செய்துகிட்டிருந்தானாம். அந்த கதையா, இன்னைக்கு தினகரன் பேப்பர்ல திருச்சி ஏரியாவுல எத்தனை தியேட்டர்ல ரிலீஸ் என்று பார்த்தேன். ஐம்பதை தாண்டி போய்கிட்டிருந்தது. இன்னும் கூடுதலா இருக்கலாம், ஏன்னா திருச்சி சோனா காம்ப்ளக்ஸ்லயே மூணு ஸ்கிரீன்ல் திரையிடுறதா தினத்தந்தியில விளம்பரம்.

நெட்ல எல்லா ஏரியாவுலயும் மெர்சல் வெளியிடப்படும் தியேட்டர் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தேன்... என்னால எண்ணி சொல்ல முடியாது. குத்து மதிப்பா பார்த்தா தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டரை தாண்டும் போலிருக்கு. (அறு நூறுன்னா எவ்வளவு? அது நூறை எல்லாம் தாண்டி போயிடுச்சுப்பா...)

காலையில் 7 மணிக்கு கடைத்தெரு பக்கம் சென்றேன். திருவாரூர் தைலம்மை தியேட்டரில் (750 இருக்கைகள் இருக்கும். எக்ஸ்ட்ரா சேர் போடுவாங்களா, எத்தனை போடுவாங்கன்னெல்லாம் தெரியாது.) மூணு ஷோவுக்குரிய கூட்டம் வெளியில் நின்றது.

Image Credit : Dinakaran Daily Paper













இனி பிளாஷ்பேக்,
என்னுடைய சின்ன வயசுல பார்த்தா, ரஜினி படத்தோட அம்பதாவது நாள்ல தமிழகம் முழுவதும் எல்லா தியேட்டரோட பட்டியலையும் போடுவாங்க. அப்போ சுமாரா 70 முதல் 80 தியேட்டர் வரும். இப்போ ஒவ்வொரு ஏரியாவுலயும் அந்த எண்ணிக்கையை தொட்டுடும் போலிருக்கு. நாலு நாள் வசூலை சிந்தாம சிதறாம அள்ள முடிவு பண்ணிதான் தீபாவளி மாதிரி பண்டிகைக்கு இப்போ ஒரு பெரிய பட்ஜெட், ரெண்டு அல்லது மூணு சின்ன பட்ஜெட் படங்களுக்கு மேல ரிலீஸ் ஆகுறது இல்லை.

*********************************

இனி... 2016 தீபாவளி அன்று எழுதிய பதிவின் ஒரு பகுதி...

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே வீட்டில் பலகாரம் சுடுவதற்கான ஏற்பாடுகள், ஆயத்த ஆடைகளை நாடுபவர்கள் குறைவு என்பதால் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே டைலரிடம் கொடுத்து அவர் தீபாவளிக்கு முதல்நாள் டெலிவரி தேதி குறித்துக் கொடுத்த அட்டையுடன் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்பது, அப்பா, அம்மா, மாமா என்று பலரிடமும் போராடி சிறு சிறு அளவில் வெடிகள் வாங்கி அதை காய வைத்து காப்பாற்றி வைத்திருப்பது என்று இன்னும் என்னென்னவோ சம்பவங்கள், நினைவுகளை கண் முன் நிறுத்தும்.

செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் கால கட்டம் தொடங்கிய உடனேயே தீபாவளியின் முகம் மாறிவிட்டது என்று கூறலாம். தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளித்து விட்டு பேருக்கு எதாவது வெடியை கொளுத்தி விட்டு பிறகு கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கிய இனிப்பு, கார வகைகளை பேருக்கு டேஸ்ட் பார்த்துவிட்டு தொ(ல்)லைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் மூழ்கத்தொடங்கிவிட்டோம்.

பல ஆண்டுகளாக இருந்த பண்டிகை கொண்டாட்ட முறை மாறிய பிறகு அந்த வடிவமாவது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றால் இணையம், ஸ்மார்ட் போன் ஆகியவை அதற்கு வேலையே வைக்கவில்லை. தினமும் காலை (?!) 4 மணி அல்லது 5 மணிக்கு எழுந்து, ஆறரை அல்லது ஏழு மணிக்குள் ஷேர் ஆட்டோ, பேருந்து, வேலைசெய்யும் நிறுவன பேருந்து, மின்சார ரயில் என்று பிடித்து மேற்பார்வையாளர் அல்லது மேலாளரிடம் திட்டு வாங்காமல் ஆபீசுக்குள் நுழைந்து அரைகுறை சாப்பாட்டுடன் வேலையை பார்த்து, மாலை பணி முடித்து அதே போல் திருவிழா கூட்டத்திற்குள் சிக்கி இரவு 11 மணிக்கு வீடு வந்து சேரும் பாவப்பட்ட வாழ்க்கையை கோடிக்கணக்கான நபர்கள் பெரும் நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அவர்களுக்கு தீபாவளி என்றால் பொழுது விடிந்த பிறகு எழுந்திருப்பது மட்டும்தான் தீபாவளி.

இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் பெரு நகரங்கள் என்றில்லை, சின்ன சின்ன கிராமங்களில் கூட அருகிலுள்ள நகரத்திற்கு கடைகளில் விற்பனை, அல்லது உற்பத்தி சார்ந்த வேலைகளுக்கு செல்லும் அனைத்து வயதினருக்கும் இதுதான் நிலை. சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் போன்று ஆபத்தான தொழிலில் இருப்பவர்கள் நிலை இன்னும் சோகம். இது போன்றவர்களும், இருக்க இடம் இன்றி பிளாட்பாரங்களில் வாழ்பவர்களும் தீபாவளி போன்ற பண்டிகையை கொண்டாடுவார்களா? அந்த மன நிலை அவர்களுக்கு இருக்குமா? அவர்கள் அப்படி கொண்டாட ஆசைப்பட்டாலும் பொருளாதாரம் இடம் தருமா என்றெல்லாம் யோசித்தால் மவுனம்தான் பதிலாக இருக்க முடியும்.

பொருளாதார ரீதியில் சிரமப்படுபவர்களை விட்டுவிடுவோம். பண்டிகை கொண்டாடக்கூடிய அளவில் வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தின் நிலை வேறு வகையில் சிதைந்து இருக்கிறது. அதாவது ப்ரீகேஜி, எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு கூட காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை ஷெட்யூல் இருக்கிறது. அவர்கள் சாதாரண நாட்களில் வீட்டுக்கு வெளியே விளையாடவே நேரம் கொடுப்பதில்லை. அத்தகைய குழந்தைகளும் தீபாவளி அன்று தொலைக்காட்சி, இணையம், ஸ்மார்ட் போன் என்று மூழ்கி விடுகிறார்கள்.

இன்னும் ஒரே ஒரு வழக்கம் மட்டும் ஓரளவு தமிழ் மக்களிடம் இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தீபாவளி அல்லது அதற்கு அடுத்த நாள் சினிமாவுக்கு செல்லும் வழக்கம்தான் அது.

முன்பெல்லாம் ஏழு அல்லது எட்டு படங்கள் கூட தீபாவளியில் ரிலீஸ் ஆகும். மொத்தத்தில் தமிழகம் முழுவதும் 60 முதல் 80 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலே அதிகம். வீடியோ பைரசி அபாயம் இல்லாமல் இருந்த காலத்தில் பெயிலியரான மொக்க படம் கூட குறைந்த பட்சம் தியேட்டர்களில் இரண்டு வாரங்கள் ஓடி லாபம் சம்பாதித்து கொடுத்ததுண்டு. ஆனால் தற்போது முதல் காட்சி ஓடும்போதே படம் ஹிட் அல்லது பிளாப் என்று ரசிகர்கள் இணையத்தில் உளறிக்கொட்டி விடுகிறார்கள். அதனால் தீபாவளிக்கு இரண்டு படங்கள் அல்லது மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி எல்லா தியேட்டர்களிலும் தங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று மறைமுகமாக கட்டாயப்படுத்திவிடுகின்றன.

இது ஒருபுறமிருக்க, இன்னமும் சினிமாவில் கதை நாயகன் செய்யும் சாகசங்களில் எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்றாலும், படங்களில் பார்க்கும் சில விசயங்கள் தப்பு. அதை நாம் செய்தால் சக மனிதன் பாதிக்கப்படுவான் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படும் இளைய தலைமுறையினர் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வேலைக்கு சென்று பக்குவப்பட்ட பிறகு தப்பு செய்வதில்லை என்றாலும் இடைப்பட்ட காலத்தில் தடம் மாறும் இளைய தலைமுறையால் சமூகத்தில் பல மனிதர்கள் வெவ்வேறு வகைகளில் பாதிப்பை சந்திக்கிறார்கள்.

உதாரணமாக நாம் ஆசைப்பட்ட பெண் கிடைக்க வில்லை என்றால் காலம் கூடி வரும்போது கண்டிப்பாக திருமணம் நடக்கும், நம் மீதும் நம் குடும்பத்தின் மீதும் அன்பு செலுத்த ஒருத்தி கிடைப்பாள். அவளை நல்லபடியாக வைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு இருப்பதில்லை. கொஞ்சம்பேர்தானே அப்படி இருக்கிறார்கள். அதனால் என்ன என்று விட்டுவிட முடியாது. இந்த சொற்ப சதவீதத்தினர்தான் தன்னை விரும்பாத பெண்ணை கொலை செய்வது, திராவகம் வீசுவது போன்று கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதைப்பற்றி எழுதும் எனக்கே மனம் கலங்குகிறது என்றால் நேரடியாக பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நிலையையும் மன நிலையையும் பற்றி எழுத வார்த்தைகளே வரவில்லை.

1996ஆம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தில் ஒருதலையாக காதலித்த பெண், வேறு ஒருவரை விரும்புவது தெரிந்ததும் பகையாகி கிடக்கும் இரு குடும்பத்தை சேர்த்து வைத்து அந்த காதலர்களையும் இந்த ஒருதலைக்காதலனே சேர்த்து வைப்பதாக கதை இருக்கும். ஆனால் அந்த படத்தில் நடித்த விஜய், 2003ல் திருமலை படத்தில் விருப்பம் இல்லாத ஜோதிகாவை விரட்டி விரட்டி காதலிப்பதாக கதை போகும். படத்தில் ஜோதிகா மீது விஜய் வன்முறையில் இறங்குவதாக காட்சி இல்லை என்றாலும், சில அரைவேக்காட்டு இளைஞர்கள் மனதில், பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றாலும் பந்தாவாக, தைரியமாக ஒருத்தியை விரட்டினால் நாளடைவில் தனக்கு மயங்கிவிடுவாள் என்று முட்டாள்தனமான சிந்தனை விதை விழுந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

1997ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற சூர்ய வம்சம் படத்திலும் படிப்பை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, நீ என் அப்பாவுக்கு எப்பவுமே பிடிச்ச பெண்ணாயிரு. நான் பிடிக்காத பிள்ளையாவே இருந்துடுறேன் என்று பெருந்தன்மையுடன் ஒதுங்கிவிடும் வகையில் சரத்குமார் கேரக்டர் இருக்கும். இது போல் எத்தனையோ நல்ல சினிமாக்களை மேற்கோள் காட்ட முடியும்.

நான் கூறுவது, இந்த மாதிரி தெய்வீகத்தன்மையுடன் இளைஞர்கள் இருக்க வேண்டாம். தன்னை பிடிக்கவில்லை என்று கூறும் பெண்ணை விட்டு ஒதுங்கி இவன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழச்சென்றால் போதுமே.

**********************************

No comments:

Post a Comment